அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் - சுற்றுலாத்தலங்கள்

அருகிலுள்ள திருக்கோயில்கள்


அருள்மிகு அர்த்தனாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு

      திருச்செங்கோடு புனித ஸ்தலம் வேத காலத்தில் ‘திருக்கோடி மட செங்குன்றூர்’ என்று அழைக்கப்பட்டது. தேவாரம், சிலப்பதிகாரம் முதலிய புராணங்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இளங்க்கோவடிகள் தமது சிலப்பதிகாரத்தில், திருச்செங்கோடு ஸ்தலத்தை ‘செங்கோடு’ என்றும், இவ்விடம் அனேக புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு சிறப்போடும் செழுமையோடும் விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

      நாயன்மார்களுள் ஒருவரான திருஞானசம்பந்தர் தமது பக்தி சாரமான தேவாரத்தில் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் திருக்கோயிலைப் புகழ்ந்து பாடியுள்ளார். மேலும், அருணகிரிநாதர், இளங்கோவடிகள், கவிராஜ பண்டிதர் முதலிய புகழ்பெற்ற புலவர்கர்கள் தங்கள் பாடல்களில் இத்திருத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். பிருங்கி முனிவர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோரின் உருவச்சிலைகளை இத்தலத்தில் காணமுடிகிறது.

      திருக்கோயில் கல்வெட்டுக்களின்படி இந்த மலைக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பல மன்னர்களாலும், ஊர்த்தலைவர்களாலும் புணரமைப்புத் திருப்பணிகளும் கூடுதல் கட்டமைப்புகளும் செய்யப்பட்டுச் சிறந்து விளங்குகின்றது.

      திருச்செங்கோட்டிலுள்ள மலை 650 அடிகள் உயர்ந்து சிறப்புப் பெற்றுள்ளது. இம்மலை செம்மலை, நாகமலை, நந்திமலை எனப் பல பெயர்கள் பெற்று சிறக்கிறது.

இணையதல முகவரி : www.arthanareeswarartemple.tnhrce.in

அருள்மிகு அசல தீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர்

      தெய்வீக தேவாரப் பதிகங்களில் வைப்புத்தலமாகப் போற்றப்படும் சிவ பெருமானின் திருக்கோயில்களில் அருள்மிகு அசல தீபேஸ்வரர் திருக்கோயிலும் இணைந்துள்ளது. திருக்கார்த்திகை மாதம் (நவம்பர்-டிசம்பர்) பரணி தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகைத் திருநாளின் மறுநாள் ஏற்றப்படும் திருவண்ணாமலை தீபத்தை ஒத்த சிறப்புடையது. இந்நன்நாளில் இறைவனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன. மகத்துவம் பொருந்திய பீஜவ மஹரிஷி திருக்கோயிலின் தீபஸ்தம்பத்தில் பரணி தீபத்தை ஏற்றுகிறார். தற்போது இவ்வழக்கம் அனைத்துத் திருவிழாகளிலும் பின்பற்றப்படுகின்றது. திருக்கோயில் தூணில் இதனைக் கல்வெட்டாகக் காணமுடிகிறது.

      எப்போதும் சுடர்விடும் தீபம் ஒன்று இறைவன் சன்னதியில் எரிந்து கொண்டே இருக்கின்றது. எனவே, இறைவன் அசல தீவேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். அசலம் என்றால் மலை போல் நிலத்திருப்பது என்பது பொருள். இறைவன் தியான நிலையிலும், தீபம் அசையா நிலையிலும் நிலையாய் இருப்பது இத்திருக்கோயிலின் சிறப்பாகும்.

ஸ்ரீ நாவலாடி கருப்புசுவாமி திருக்கோயில், மோகனூர்

      ஸ்ரீ நாவலாடி கருப்புசுவாமி பீடமாகக் காட்சி தருகிறார். பழங்காலத்து வியாபாரிகளால் கற்களைக் கொண்டு இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த பீடத்தில் கண்கள், மூக்கு, திலகம் ஆகியவை சந்தனத்தால் வைக்கப்பட்டு தெய்வ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பீடத்தின் மீது தலைப்பாகையும் வைத்து வணங்குகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி மரத்தில் கட்டுகின்றனர். இது இறைவனிடம் கொடுக்கும் மனுவாகக் கருதப்படுகிறது. இந்த சீட்டுக்களைத் தொடுவதற்கும் எவருக்கும் தைருயம் வருவதில்லை. தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பின் பக்தர்கள் ஆடு, கோழி முதலிவற்றை பலி கொடுத்து தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். இந்த பலிபீடம் கருப்புசுவாமி பீடத்திற்கு அருகில் இருக்கின்றது. சுவாமிக்குப் பாதுகை காணிக்கை செலுத்தும் பழக்கமும் வழக்கத்தில் உள்ளது.

அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மோகனூர்

      பழனியில் வீற்றிருப்பதைப் போல் இத்திருக்கோயிலில் முருகன், தன் வலது கையில் தண்டத்தோடு மேற்கு நோக்கி ஆவுடையாராக நின்று அருளுகிறார். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமணத்தடைகளை சந்திக்கும் பக்தர்கள், இத்திருக்கோயில் முருகனை செவ்வாய் கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரமும், செவ்வரளி மலர்களையும், மாலையும் சமர்ப்பித்து வணங்குகின்றனர். 27 நட்சத்திரங்களும், 12 இராசிகளும் சேர்ந்து, திருக்கோயிலை அடையும் 39 படிக்கட்டுகளாக அமைந்திருக்கின்றன. சித்திரா பௌர்ணமியன்று படிபூஜை நடைபெறுகிறது. மாத கிருத்திகை மற்றும் ஷஷ்டி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன.

      திருக்கோயிலின் வெளியே ஒரு சிரிய குன்றில் இடும்பர் ஸன்னதி உள்ளது. இடும்பர் தனது தோள்களில் காவடியைத் தூக்கியவாறு தெற்கு நோக்கி காட்சி தருகிறார். பத்துக்கரங்களுடன் ஸ்ரீ வல்லப விநாயகர் அருள்கிறார். அருணகிரிநாதருக்கு சன்னதி உள்ளது. இவரது பிறந்த தினமான ஆனி மாதம் மூல நட்சத்திரம் (ஜூன்-ஜூலை) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகவான் காலபைரவருக்குத் தனிச் சன்னதி உள்ளது. மாதத்தின் அஷ்டமி தினத்தன்று ஸ்ரீகாலபைரவருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. இந்த ஸ்தலம் சிவனின் மகனுக்குச் சொந்தமானதால் ‘மகனூர்’ எனப் பெயர் பெற்றது, இதுவே காலப்போக்கில் திரிந்து ‘மோகனூர்’ என்றாகி உள்ளது.

அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கடரமணர் திருக்கோயில், மோகனூர்

      வேதசுரங்க விமானத்தின் கீழ் வீற்றிருந்து பெருமாள் தன் பக்தர்களை அருள்கிறார். திருப்பதி இறைவனின் அருளால் இத்திருக்கோயில் அமைக்கப்பட்டதால், ‘ஒரு நாள் திருப்பதி’ என்ற திருவிழா இங்கு கொண்டாடப்படுகின்றது. இத்திருவிழா நவராத்திரி நாட்களில் (செப்டம்பர்- அக்டோபர்) வரும் ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகின்றது. திருப்பதியில் நடைபெறுவதைப் போன்றே காலை முதல் இரவு வரை, அனைத்து சேவைகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன. பெருமாளும் திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்றே அலங்கரிக்கப்படுகிறார்.

      மூலவரைப் போன்றே உற்சவரும் முக்கியத்துவம் வாய்ந்தவராக உள்ளார். பொதுவாக விஷ்ணு ஸ்தலங்களில், ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயார் இறைவனின் திருமார்பில் இடம் பெற்றிருப்பார். இத்திருத்தலத்தில், தாயார் ஒரு முக்கோண வடிவில் லக்ஷ்மி ரேகையாக பகவானின் திருமார்பில் இடம்பெற்றுள்ளார்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், இராசிபுரம்

      இறைவன் கைலாசநாதர், சுயம்புலிங்கமாக அம்புக் காயத் தழும்போடு மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். பொதுவாக சிவன் கோயில்களில் சிவராத்திரி திருநாளன்று (பிப்ரவரி-மார்ச்) நான்கு கால பூஜைகள் நடைபெறும். இத்திருக்கோயிலில் ஆறு கால பூஜைகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

      அன்னை அம்பிகை, அறம் வளர்த்த நாயகி தனது சன்னதியில் மேற்கு நோக்கி எழுந்தருளுகிறார். அன்னையின் முன்னே மஹா மேரு ஸ்ரீ சக்கரம் அமைந்திருக்கிறது. சந்தான வரம் வேண்டி வரும் பெண்கள் பிரதோச தினத்தின் நண்பகலிலும், பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு தேங்காய், பழங்கள், அரிசி மற்றும் உப்பு சேர்த்தாத அன்னம் முதலியவற்றை நிவேதனமாக வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். இவ்வாறு அன்னையை வழிபடுவதால், சந்தான பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

      மேற்கு நோக்கி இருக்கும் இத்திருக்கோயிலின் ஸ்தலவிருட்சமாக நெல்லிமரம் அமைந்திருக்கிறது. கோபுரத்தின் கீழ் வீற்றிருக்கும் விநாயகப்பெருமான் நந்தியாரை எதிர்நோக்கி அமர்ந்துள்ளார். இப்பிள்ளையாருக்கே முதல் பூஜை நடைபெறுகின்றது. அன்னை சிவதுர்கை தீய சக்திகளிடமிருந்து காத்தருளுகிறார். ஆடி மாதத்தின் (ஜூலை-ஆகஸ்டு) கடைசி வெள்ளிக்கிழமையன்று அன்னை சிவதுர்கைக்கு சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. பிரகாரத்தை வலம் வரும் போது இறைவன் காசிவிஷ்வநாதர் அன்னை விசாலாக்ஷி முதலிலும், அப்பன் ஸ்ரீராமநாதசுவாமி அன்னை பர்வதவர்தினி கடைசியிலும் இருந்து அருள் தருகின்றனர். இத்திருக்கோயில் காசி-இராமேஸ்வரம் பாரம்பரியத்தில் அமைந்துள்ளது. பிரகாரத்துள் சிவகங்கை தீர்த்தம் தானே தோன்றி நிலைத்திருக்கின்றது. நந்திதேவரோடு கூடிய வீரபத்திரர் சன்னதி உள்ளது. ஒரே கல்லில் உருவமைக்கப்பட்ட விகடவிநாயகப் பெருமான் தன் கைகளில் ருத்ராக்ஷ மாலையுடன் அருள் தருகிறார்.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இராசிபுரம்

      பொதுவாக மாரியம்மன் திருக்கோயில்களில் திருவிழா நாட்களில் மட்டுமே மூன்று கிளைகள் கொண்ட கம்பம் அம்பிகையின் முன் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். இத்திருக்கோயிலில் இக்கம்பம் எப்போதுமே நிலைத்திருக்கின்றது. இக்கம்பத்தைத் தன் தலைவனாகக் கருதி அம்பிகையின் நேர்ப்பார்வை இக்கம்பத்தில் சேர்கின்றது எனக் கூறுகின்றனர். அன்னை நித்திய சுமங்கலியாக இங்கு வீற்றிருக்கிறார். அன்னையை வணங்குவதால் தங்கள் மாங்கல்ய பலம் கூடும் என்று நம்பி பெண்கள் அன்னையை வணங்குகின்றனர்.

      ஐப்பசித் திருவிழாவின் போது, பழைய கம்பத்தை நீக்கப்பட்டு புதிய கம்பம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அப்பழைய கம்பம் அருகிலுள்ள கிணற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தயிர்சாதம் நிவேதனம் செய்யப்படுகின்றது. சந்தான பாக்கியம் வேண்டி வரும் பெண்கள் இந்த நிவேதன தயிர்சாதத்தை பிரசாதமாகப் பெற்று உட்கொண்டால், அவர்கள் குறை நீங்கப்பட்டு குழந்தைகளைப் பெறுவர் என்று கூறப்படுகின்றது.

ஏற்காடு மலைகள்

      பிரபல சுற்றுலா மலை வாசஸ்தலங்களில் ஒன்றான ஏற்காடு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள சேர்வராயன் மலைச் சிகரங்களில் ஏற்காடு அமைந்துள்ளது. ஏற்காட்டு மலைப்பகுதிகளை சேர்வராயன் மலைகள் என்றும் கூறகின்றனர். கடல்மட்டத்திலிருந்து சுமார் 1515 மீட்டர்கள் (4970 அடிகள்) உயரத்தில் அமைந்துள்ளது. ஏற்காட்டின் உச்சிமுனை (5,326 அடிகள்) 1,623 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. மலை உச்சியில் சேர்வராயன் திருக்கோயில் அமைந்திருக்கின்றது. அழகிய ஏறியும் அதன் அருகில் அமைந்திருக்கும் காடாகவும் இருப்பதால் ‘ஏற்காடு’ எனப் பெயர்பட்டது. புகழ்பெற்று விளங்கும் சுற்றுலாத் தலமான ஏற்காடு, தென்னகத்தின் அணிகலன் என்றும், ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படுகின்றது. ஏற்காடு, சேலம் மாநகரத்தோடு இணையும் போக்குவரத்து நெடுஞ்சாலைகளைக் கொண்டுள்ளது.


கிளியூர் அருவி

      கிளியூர் அருவி தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சேர்வராயன் மலைச் சிகரங்களில் அமைந்துள்ளது. நிறைந்து வழிந்தோடும் ஏற்காடு ஏறியின் நீர் சுமார் 300 அடிகளிலிருந்து (91மீ) கிளியூர் பல்லத்தாக்கில் வீழ்கிறது. ஏற்காடு ஏறியிலிருந்து 2.5கிமீ (1.6 மைல்) தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பருவமலைக் காலத்தில் நீர்வீழ்ச்சியின் அளவு அதிகமாகும். இது காண்பவரை மூச்சடைத்து நிற்கச்செய்யும் அழகைப் பெற்றிருக்கும்.

      ஏற்காட்டின் வெப்ப அளவு 29 டி.செ (84 டி.பே) மேலும் உயர்வதில்லை, 13 டி.செ (55 டி.பே) அளவைவிட குறைவதும் இல்லை. காபி மற்றும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் வாழை, பேரிக்காய், பலா முதலியவை அதிகம் பயிரிடப்படுகின்றன. ஏற்காடு மலையில் ஏறிச்செல்வது சிறந்த பொழுதுபோக்காக அமைகின்றது. மேலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஏற்காடு கண்கொள்ளா அழகைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.


அமைவிடம்

      ஏற்காடு ஏறியிலிருந்து 2.5கிமீ (1.6 மைல்) தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பருவமலைக் காலத்தில் நீர்வீழ்ச்சியின் அளவு அதிகமாகும். இது காண்பவரை மூச்சடைத்து நிற்கச் செய்யும் அழகைப் பெற்றிருக்கும்.


அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல். Copyright ©2014